Sunday, 13 March 2011

உலகக்கோப்பையில் தென்ஆபிரிக்காவிடம் சுருண்ட இந்தியா

உலக கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவர் வரை துணிச்சலாக போராடிய தென் ஆப்ரிக்க அணி சாதித்துக் காட்டியது. இந்திய தரப்பில் சச்சின் சதம் வீணானது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. நேற்று நாக்பூரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் பியுஸ் சாவ்லாவுக்குப் பதில் முனாப் படேல், தென் ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாகிருக்குப் பதில் ஜோகன் போத்தா இடம் பெற்றனர்.

சூப்பர் துவக்கம்:

இந்திய அணிக்கு வழக்கம் போல சச்சின், சேவக் இணைந்து அதிரடி துவக்கம் கொடுத்தனர். இவர்கள், தென் ஆப்ரிக்க வீரர்களின் பவுலிங்கை ஒருகை பார்த்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கினார் சேவக். மார்கல் ஓவரில் "அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பிய இவர், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசினார்.

பீட்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்து, சர்வதேச அரங்கில் தனது 37 வது அரைசதம் அடித்தார் சேவக். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில், 73 ரன்கள் எடுத்த சேவக் (66 பந்து, 12 பவுண்டரி), டு பிளசிஸ் பந்தில் போல்டானார்.

சச்சின் சதம்:

மறுமுனையில் சேவக்கை விட அதிரடியாக ஆடினார் சச்சின். ஸ்டைன் பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்த சச்சின், "பார்ட் டைம்' பவுலர் டுமினியையும் விட்டு வைக்கவில்லை. இவருடன் இணைந்த காம்பிரும் பவுண்டரிகளாக விளாசினார். சச்சின், சர்வதேச ஒருநாள் அரங்கில் 48வது சதம் அடித்து அசத்தினார். 

"பவர்பிளே' ஏமாற்றம்:

பின் "பேட்டிங் பவர்பிளேயில்' அதிரடியாக ரன் சேர்ப்பார்கள் என்ற நிலையில், எதிர்பார்ப்புக்கு மாறாக அடுத்தடுத்து அவுட்டாகினர். 111 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த சச்சின், முதலில் சரிவைத் துவங்கி வைத்தார். 

ஸ்டைன் அசத்தல்:

ஸ்டைன் "வேகத்தில்' மிரட்டினார். இவரது 8வது ஓவரின் முதல் பந்தில், 23 வது அரைசதம் அடித்த காம்பிர் (69) வெளியேறினார். 3வது பந்தில் யூசுப் பதான் "டக்' அவுட்டானார். யுவராஜ் சிங், 12 ரன்னில் நடையை கட்டினார். "பேட்டிங் பவர்பிளேயில்' 30 ரன்கள் மட்டும் எடுத்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
விராத் கோஹ்லி (1), ஹர்பஜன் சிங் (3) ஏமாற்றினர். ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, முனாப் படேல் "டக்' அவுட்டாக, இந்திய அணி 48.4 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தோனி (12) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆம்லா அபாரம்:

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா இணைந்து துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 16 ரன்கள் எடுத்தார். காலிஸ், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஆம்லா 13 வது அரைசதம் அடித்தார். இவர் (61) ஹர்பஜன் சுழலில் சிக்கினார்.

காலிஸ் அரைசதம்:

பின் காலிஸ், டிவிலியர்ஸ் சேர்ந்து விரைவாக ரன் சேர்க்கும் முயற்சியில் இறங்கினர். 81வது அரைசதம் கடந்த காலிஸ் (69), ஹர்பஜனின் "சூப்பர் "த்ரோவில்' ரன் அவுட்டானார். அடுத்து டிவிலியர்ஸ், டுமினி ஜோடி சேர்ந்து பேட்டிங் "பவர்பிளேயை' சரியாக பயன்படுத்தியது. இதில் 52 ரன்கள் சேர்க்க, தென் ஆப்ரிக்க அணிக்கு சற்று நெருக்கடி குறைந்தது.

ஹர்பஜன் ஆறுதல்:

இந்நிலையில் பவுலிங் செய்யவந்த ஹர்பஜன், அதிரடியில் மிரட்டிய டிவிலியர்சை (52) வெளியேற்றினார். இவரது சகா டுமினியும் (23), தோனியின் தாமதமான "ஸ்டம்பிங்கில்' திரும்பினார். வான் விக் (5) ஏமாற்றினார். கடைசியில் போத்தா 23 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். 
கடைசி 12 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் 49வது ஓவரை வீசிய ஜாகிர் கான் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

6 பந்து 13 ரன்:

கடைசி 6 பந்தில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு தேவை 13 ரன்கள் தேவைப்பட்டன. ஆஷிஸ் நெஹ்ரா சொதப்பலாக பந்துவீசினார். முதல் பந்தில் பீட்டர்சன் பவுண்டரி அடிக்க "டென்ஷன்' எகிறியது. அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார். 3வது பந்தில் பீட்டர்சன் 2 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தில் மீண்டும் பவுண்டரி அடிக்க, தென் ஆப்ரிக்க அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்து, "திரில்' வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்டைன் வென்றார்.

மீண்டும் 2.5 மீ.

நேற்று தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் பேட்டிங் செய்த போது, ஜாகிர் கானின் பந்தில், அம்பயர் அவுட் தர மறுத்தார். இதனால் தோனி, டிஆர்.எஸ்., முறையில் அப்பீல் செய்தார். இதில் பந்து "ஆப் ஸ்டம்சை' தகர்த்தது. ஆனால் 2.5 மீ.,க்கும் அதிகமான தூரத்தில் "பிட்ச்' ஆகியிருந்தது. சமீபத்தில் மாற்றப்பட்ட விதிப்படி, 2.5 மீ., தூரத்துக்கும் அதிகமாக இருந்தால், நடு "ஸ்டம்பின்' மீது பட்டால் தான் அவுட் தரப்படும். பின் காலிஸ் தொடர்ந்து விளையாடினார். 

வரலாறு திரும்பியது

கடந்த 2006, மார்ச் 12ல் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 434 ரன்கள் குவித்தது. மிரட்டலான இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி, 49.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 438 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அதே நாளில் இந்தியாவுக்கு எதிராக 300 ரன்கள் எடுத்து வென்றுள்ளது.

தோனியின் தவறுகள்

கேப்டன் தோனி நேற்று தேவையில்லாமல் பேட்டிங் வரிசையை மாற்றினார். முன்னதாக களமிறக்கப்பட்ட யூசுப் பதான் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் வந்த விராத் கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 

* கடைசி ஓவரை, ஹர்பஜனிடம் கொடுக்காமல், ஆஷிஸ் நெஹ்ராவிடம் கொடுத்தார் தோனி. இதன் காரணமாக, இந்திய வெற்றி கைநழுவிப் போனது.

அதிவேக "100'

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்திய அணி நேற்று 11.4 ஓவரில் 100 ரன்களை எட்டியது. உலக கோப்பை தொடரில் அதிக வேகமாக ஒரு அணி எடுத்த 100 ரன்கள் இதுவாகும்.

"பவர் பிளேயில்' அதிகம்
நேற்றைய போட்டியின் வழக்கமான முதல் 10 ஓவர்கள் "பவர்பிளேயில்' இந்திய அணி 87 ரன்கள் குவித்தது. இது, இந்த உலக கோப்பை தொடரில் முதல் "பவர்பிளேயில்' எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இதுவாகும். இதற்கு முன் இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக 82/3 ரன்கள் எடுத்திருந்தது.

மீண்டும் பவுண்டரி
உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் சேவக், புதிய முறையில் ரன்கணக்கை துவங்கி வருகிறார். அதாவது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடித்து துவக்கினார் சேவக். அடுத்து இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளிலும் முதல் பந்தில் பவுண்டரி விளாசினார். இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்டினார்.

29 ரன்கள் 9 விக்கெட்
நேற்று சச்சின், சேவக் இருவரும் துவக்கத்தில் இருந்தே அதிரடியில் தூள் கிளப்பினார்கள். முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த இந்திய அணி, 25 ஓவர்களில் 173/1 ரன்கள் எடுத்தது. இதனால் எப்படியும் 400 ரன்களை எட்டிவிடும் என்று நினைத்த நிலையில், "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொதப்பினர். இதனால் 39.3 ஓவரில் 267 க்கு 1 விக்கெட் என, வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்து 29 ரன்களை (296) எடுப்பதற்குள், 9 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்கிறது சச்சின் சாதனை!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருபவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். உலக கோப்பை அரங்கிலும் சச்சின், பல சாதனைகள் ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, 5 உலக கோப்பை சதம் அடித்து, அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று, 6வது சதம் அடித்து அசத்தினார்.

இந்த வரிசையில் "டாப்-5' வீரர்கள் விபரம்:
பெயர்/அணி போட்டி சதம் 
1.சச்சின் (இந்தியா) 41 6
2. கங்குலி (இந்தியா) 21 4
3. மார்க் வாக் (ஆஸி.,) 22 4
4. பாண்டிங் (ஆஸி.,) 42 4
5. டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,) 14 3
---
நமீபியாவுடன் அதிகம்
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களில், நமீபியாவுக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 152 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் அடித்த 6 சதங்களின் விபரம்:

ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து
2011 111 தென் ஆப்ரிக்கா

தேவை ஒரு சதம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (48), டெஸ்ட் (51) அரங்கில் இதுவரை சச்சின் மொத்தம் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் அடித்து மற்றொரு புதிய சாதனை படைக்கலாம். இது இந்த உலக கோப்பை தொடரில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்கோர் போர்டு

இந்தியா

சேவக் (ப)டு பிளசிஸ் 73(66)
சச்சின் (கே)டுமினி (ப)மார்கல் 111(101)
காம்பிர் (கே)காலிஸ் (ப)ஸ்டைன் 69(75)
யூசுப் (கே)ஸ்மித் (ப)ஸ்டைன் 0(2)
யுவராஜ் (கே)போத்தா (ப)காலிஸ் 12(9)
தோனி -அவுட் இல்லை- 12(21)
கோஹ்லி (கே)+(ப)பீட்டர்சன் 1(3)
ஹர்பஜன் (ப)ஸ்டைன் 3(9)
ஜாகிர் (கே)மார்கல் (ப)பீட்டர்சன் 0(3)
நெஹ்ரா (கே)ஸ்மித் (ப)ஸ்டைன் 0(3)
முனாப் (ப)ஸ்டைன் 0(1)
உதிரிகள் 15
மொத்தம் (48.4 ஓவரில் "ஆல்-அவுட்') 296

விக்கெட் வீழ்ச்சி: 1-142(சேவக்), 2-267(சச்சின்), 3-268(காம்பிர்), 4-268(யூசுப்), 5-283(யுவராஜ்), 2-286(கோஹ்லி), 7-293(ஹர்பஜன்), 8-294(ஜாகிர்), 9-296(நெஹ்ரா), 10-296(முனாப்).
பந்துவீச்சு: ஸ்டைன் 9.4-0-50-5, மார்கல் 7-0-59-1, காலிஸ் 8-0-43-1, பீட்டர்சன் 9-0-52-2, டுமினி 3-0-29-0, போத்தா 9-0-39-0, டு பிளசிஸ் 3-0-22-1.

தென் ஆப்ரிக்கா

ஆம்லா (கே)தோனி (ப)ஹர்பஜன் 61(72)
ஸ்மித் (கே)சச்சின் (ப)ஜாகிர் 16(29)
காலிஸ் -ரன் அவுட்-(தோனி/ஹர்பஜன்) 69(88)
டிவிலியர்ஸ் (கே)கோஹ்லி (ப)ஹர்பஜன் 52(39)
டுமினி (ஸ்டெம்)தோனி (ப)ஹர்பஜன் 23(20)
டு பிளசிஸ் -அவுட் இல்லை- 25(23)
வான் விக் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 5(5)
போத்தா (கே)சப்-ரெய்னா (ப)முனாப் 23(15)
பீட்டர்சன் -அவுட் இல்லை- 18(7)
உதிரிகள் 8
மொத்தம் (49.4 ஓவரில், 7 விக்.,) 300

விக்கெட் வீழ்ச்சி: 1-41(ஸ்மித்), 2-127(ஆம்லா), 3-173(காலிஸ்), 4-223(டிவிலியர்ஸ்), 5-238(டுமினி), 6-247(வான் விக்), 7-279(போத்தா).
பந்துவீச்சு: ஜாகிர் 10-0-43-1, நெஹ்ரா 8.4-0-65-0, முனாப் 10-0-65-2, யூசுப் 4-0-20-0, யுவராஜ் 8-0-47-0, ஹர்பஜன் 9-0-53-3.

No comments:

Post a Comment