Sunday, 6 March 2011

பிரித்தானியா அரசுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் இராஜதந்திர முறுகலா?

அண்மையில் சிறிலங்காவுக்கு வந்திருந்த பிரித்தானிய அமைச்சர் அலெஸ்ரயர் பேர்ட் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார்.

ஆனால் அவரைச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றச் செயலர் அலிஸ்ரயர் பேர்ட் கடந்த மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட முதலாவது உயர்நிலைப் பிரநிதிநிதி இவரேயாவார்.

இவரது பயணம் குறித்து கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தது.

இதையடுத்து சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோருடன் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கும் பிரித்தானிய அமைச்சரின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படவில்லை.

ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா வந்திருந்த பங்களாதேசின் இராணுவத் தளபதி, தென்கொரிய அமைச்சர் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.

சிறிலங்காவுடன் அவ்வளவு நெருக்கமில்லாத- பங்களாதேசின் இராணுவத் தளபதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட சிறிலங்கா அதிபர் பிரித்தானிய அமைச்சருக்குக் கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களால் அவசரமாக நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மகிந்த ராஜபக்சவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க பிரித்தானியா தவறி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்த பிரித்தானிய அரசாங்கம், தமது அமைச்சர்கள் இருவரினது கொழும்புக்கான பயணத்தையும் தடுத்திருந்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment