Sunday, 20 February 2011

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மா மரணம்!

தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதி அம்மையார் இன்று காலை யாழ்.வல்வெட்டித்துறை மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
வன்னிப் போரின் பின்னர் நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மையார் கடும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.
தடுப்புக்காவலில் இருந்த கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06-01-2010 அன்று உயிரிழந்ததை அடுத்து அவரது உடலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது பார்வதி அம்மையாரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது. பார்வதி அம்மையாருக்கு பிரபாகரன் அவர்கள் உட்பட 2 மகன், ஒரு மகள் உள்ளனர். பிரபாகரனின் சகோதரர் மனோகரன் டென்மார்க்கிலும், மகள் கனடாவிலும் வசித்து வருகிறார்கள். பார்வதி அம்மையாரை தன்னுடன் அழைத்து கொள்ள கனடாவில் உள்ள அவரது மகள் முயற்சிகளில் ஈடுபட்டார்.

இலங்கை அரசும், அதற்கு சம்மதித்தது. அதன் பேரில் பார்வதி அம்மாள் மலேசியா சென்றார். அங்கு அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கனடாவுக்கு செல்வதிலும் சட்ட சிக்கல்கள் எழுந்தது. இதனால் வேறு வழியின்றி தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற பார்வதி அம்மையார் விரும்பினார்.

மகனுடனோ, மகளுடனோ சேர முடியாத பட்சத்தில் தமிழ்நாட்டிலேயே கடைசி காலத்தை கழித்துவிடலாம் என்று பார்வதி அம்மையார் நினைத்தார்.அந்த எண்ணத்துடன்தான் அவர் மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். மத்திய குடியுரிமை அதிகாரிகள், பார்வதி அம்மையாரை தமிழ்நாட்டுக்குள் செல்ல தடை விதித்தனர். பார்வதி அம்மையார் தமிழகத்துக்குள் நுழைய தடை இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார்கள்.
தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய அரசு பார்வதி அம்மையார் நான்கு நிபந்தனைகளின் கீழ் தமிழகம் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. தமிழ்நாட்டில் 6 மாதமே தங்கி இருக்கலாம். மருத்துவமனையில் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளால் தமிழகம் செல்ல விருப்பமில்லாமல் தாயகம் திரும்பினார்.
சிகிச்சைக்காக யாழ்.வடமராட்சி மந்திகை மருத்துவமனை, யாழ்.போதனா வைத்தியசாலை என்பவற்றில் அனுமதிக்கப்பட்டு இறுதியாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதமாக சுயநினைவினை இழந்திருந்த அவர்  இன்று காலை 06 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment